சிவகங்கை மாவட்டம், கீழடி அருகே உள்ள சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகராஜன் (29) என்ற கருவாயன், சிறையில் இருந்து விடுதலையான மறுநாளே தனது மனைவி பாண்டிச்செல்வியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை தகவலின்படி, யோகராஜனுக்கும் பாண்டிச்செல்விக்கும் திருமணமாகி 6 மற்றும் 3 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். யோகராஜன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், குறிப்பாக மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, யோகராஜன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில், மனைவி தன்னை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்யவில்லை என்ற மனக்கசப்பு அவருக்கு இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறைவாசம் முடிந்து இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலையான யோகராஜன், வீட்டிற்கு வந்ததும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். புதன்கிழமை மாலை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், அதற்குள் யோகராஜன் தப்பிச் சென்றார். தகவலறிந்து வந்த கீழடி காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து மானாமதுரை டிஎஸ்பி லோகநாதன் மற்றும் காவல் ஆய்வாளர் மயில் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தப்பியோடிய யோகராஜன் திருப்புவனம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
LiveCID குறிப்பு: குற்றச்சாட்டு, கைது மற்றும் விசாரணை தொடர்பான தகவல்கள் காவல்துறை தரப்பில் கிடைத்த ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பே சட்டரீதியான முடிவாகும்.
