திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் தரப்பில் கிடைத்த தகவலின்படி, திருநின்றவூரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரின் மனைவியுடன், அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான முன்விரோதம் காரணமாக, ஜோசப் நீதிமன்றத்தில் ஆஜராக வருவதை அறிந்த ஸ்டீபன் ராஜ், தனது நண்பர்களுடன் ஆட்டோவில் நீதிமன்றம் அருகே காத்திருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட மூவர் தப்பியோடியதாகவும், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மற்றொருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 7 பட்டாக்கத்திகள் மற்றும் மிளகாய்ப்பொடி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
LiveCID குறிப்பு
இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளாகவே கருதப்பட வேண்டும்.
