திருச்சி மாநகர் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் நகர், ஹரிணி நகரில் கடந்த 25.10.2024 அன்று நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளியான ஆயிஷா பீவி (25) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று (30.07.2026) தீர்ப்பளித்தது.
காவல்துறை தகவலின்படி, குடும்பத் தகராறு காரணமாக தனது மாமியாரான சம்ஷாத் பேகம் (56) என்பவரை மார்பு, வாய் மற்றும் தோள்பட்டையில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஆயிஷா பீவி மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சம்பவத்தைத் தடுக்க முயன்ற அண்டை வீட்டுப் பெண் மற்றும் தனது 9 மாத பெண் குழந்தையையும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அரியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆயிஷா பீவியை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இவ்வழக்கின் புலனாய்வு விரைவாக முடிக்கப்பட்டு, 20.12.2024 அன்று குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணையில் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, இ.கா.ப., பாராட்டினார்.
