திருவள்ளூர் நகரின் வடக்கு ராஜா வீதியில் அமைந்துள்ள அலிஸ் சூப்பர் மார்க்கெட்டில் பட்டப் பகலில் கத்தி முனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, இளைஞர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டிற்குள் சென்று சில பொருட்களை எடுத்துக்கொண்டு பில்லிங் கவுண்டருக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த சுமார் 2 அடி நீளமுள்ள கத்தியை திடீரென எடுத்து மேசையின் மீது வைத்து, அங்கிருந்த பணியாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட பணிப்பெண் மற்றும் கடைக்குள் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், பில்லிங் கவுண்டரில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் நகர காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய நபரை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் திருவள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
