பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவர் இம்ரான் ஹானை கைது செய்ய போலீஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் தொண்டர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இம்ரான் கானின் கைதுக்கு எதிராக பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அமைப்பினர் வீதிகளில் இறங்கி போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அங்கு எந்நேரமும் காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து இம்ரானை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தானின் பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி கூறியுள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் காவல்துறையினர் கவச வாகனங்கள் புடைசூழ ஜமான் பூங்காவில் நிலைநிறுத்தப்பட்டனர். பஞ்சாப் மாகாண காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் இஸ்லாமாபாத் காவல்துறையின் துணைத் தலைவர் ஷாஜாத் புஹாரி தலைமையிலான குழுவினர் அங்கு களத்தில் இருப்பதாகக் கூறுகிறார் ஷுமைலா.
டிஐஜி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் கைது நடவடிக்கை நடைமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நடவடிக்கை குறித்தோ இம்ரான் கானை எந்த வழக்கில் கைது செய்ய போலீஸார் வந்துள்ளனர் என்பது குறித்தோ டிஐஜி கருத்து தெரிவிக்கவில்லை. அதே சமயம், பிடிஐ தலைவருக்கு எதிராக நிலுவையில் உள்ள கைது வாரண்ட் அடிப்படையில் அவரை கைது செய்ய வந்ததாக டிஐஜி ஷாஜாத் புஹாரி ஊடகங்களிடம் கூறினார்.
இந்த நிலையில், இம்ரான் கானின் வீடு முன்பாக திரளும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகியதை அடுத்து, கூட்டத்தைக் கலைக்க பிற்பகல் 3 மணிக்குப் பிறகு போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இதற்கிடையில், பிடிஐ தனது ஆதரவாளர்களை ஜமான் பூங்காவிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது.
ஆனால், அதற்கு இணங்க மறுத்த இம்ரான் கானின் ஆதரவாளர்கள், காவல்துறையினர் தங்களின் தலைவரைக் கைது செய்ய வந்துள்ளதாகவும், காவலில் அவர் விஷம்வைத்து கொல்லப்படலாம் என்றும் அஞ்சுகிறோம் என்றும் சில தொண்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நேரத்தில் போராட்டக்குழுவில் இருந்த சிலர் போலீஸாரை நோக்கி கற்களை வீசினார்கள். இதையடுத்து அங்கு கண்ணீர் புகை குண்டுகள் வீச போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். கல் வீச்சு சம்பவத்தில் போலீஸ் டிஐஜியும் காயம் அடைந்தார்.
இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் இம்ரான் கான் தமது சமூக ஊடக பக்கங்களில் சில காணொளிகளை வெளியிட்டார். அதில், தமது ஆதரவாளர்கள் பெருமளவில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
"நான் கைது செய்யப்பட்ட பிறகு, தேசம் அமைதியாகி விடும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள், அவர்களின் எண்ணம் தவறு என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதிப்படுத்த எல்லோரும் வெளியே வந்து போராடுங்கள்" என்று அந்த காணொளியில் பேசியுள்ளார்.
பிடிஐ கட்சி பகிர்ந்துள்ள சில காணொளிகளில் இம்ரான் கானின் வீட்டின் புல்வெளி பகுதியில் காவல்துறையினரின் கண்ணீர் புகை குண்டுகள் விழும் காட்சிகள் இடம்பெற்றன.