பட்டா பெயர் மாற்றம் செய்ய ₹10,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட சர்வேயர் ஜீவிதா மீது துறைத்தலைமை அதிரடி நடவடிக்கை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துலுக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர், தனது நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். அந்தப் பணியை செய்து தருவதற்காக சேலம் மாவட்ட நில அளவை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் சர்வேயர் ஜீவிதா, ₹10,000 லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் உளவுத்தகவலின் அடிப்படையில் வலைவீசி கண்காணித்தனர். அப்போது, குமரேசனிடமிருந்து கேட்ட லஞ்சத் தொகையை பெண் சர்வேயர் ஜீவிதா பெறும் நேரத்தில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் கண்ணன், பெண் சர்வேயர் ஜீவிதாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் நலனுக்காக செய்யப்பட வேண்டிய பணிகளை, பணம் வாங்கி செய்து தரும் நடைமுறைக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் இந்த முடிவு வெகுவாக வரவேற்கப்படுகிறது.