ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி.இவருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்காக நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதற்காக உண்மைத்தன்மை சான்று பெற எலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராம்ஜி (வயது 50) என்பவரை அணுகியுள்ளார்.அப்போது அவர் சான்றிதழ் அளிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரத்தினசாமி இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாயை ரத்தினசாமியிடம் கொடுத்து, இதை லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறினார்கள்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதுபோல்,ரத்தினசாமி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை ராம்ஜியிடம் கொடுத்தார்.அப்போது அந்தப் பணத்தை அங்கிருந்த முத்துக்குமார் என்பவரிடம் ராம்ஜி அளித்தார்.அதே நேரம் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றிவளைத்து ராம்ஜியையும், முத்துக்குமாரையும் கையும், களவுமாக பிடித்து விசாரித்தார்கள்.
விசாரணையில்,நம்பியூர் துணை தாசில்தார் அந்தியூரை சேர்ந்த அழகேசன் என்பவர் ரத்தினசாமிக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்க சொன்னதாகவும். அதன்பேரிலேயே தான் கேட்டதாகவும்.இதற்கு இடைத்தரகராக முத்துக்குமார் செயல்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராம்ஜி கூறினார்.
இதையடுத்து போலீசார் இருவரையும் நம்பியூர் தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அழகேசனையும் பிடித்து 3 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணைக்கு பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து துணை தாசில்தார் அழகேசன்,கிராம நிர்வாக அதிகாரி ராம்ஜி, இடைத்தரகர் முத்துக்குமார் ஆகியோரை கைது செய்தார்கள்.
விவசாய நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய 2 அரசு அதிகாரிகளும்,ஒரு இடைத்தரகரும் கைது செய்யப்பட்ட சம்பவம் நம்பியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.livecid.in
CHIEF REPORTER
Prasanth.s
www.livecid.in
Livecid.in Livecid
Crime News Gallery