காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பரபரப்பு – கார் பறிமுதல்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில், போலியான அடையாள அட்டை காட்டி தங்களை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி மிரட்டிய மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் மற்றும் உதவியாளர் வெண்ணிலா அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மூவர் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து, “நாங்கள் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்” என்று தெரிவித்தனர். அரசு முத்திரை இல்லாத போலி அடையாள அட்டையை காட்டி, அலுவலர்களை அச்சுறுத்தியதாக தகவல்.
அவர்கள் கடுமையாக மிரட்டிய நிலையில், பொதுமக்கள் சந்தேகித்து அவர்களை சுற்றிவளைத்தனர். அந்த நேரத்தில் அவர்களிடம் இருந்த அடையாள அட்டை போலியானது என உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காட்டுப்புத்தூர் காவல்துறையினர் விரைந்து சென்று சசிகுமார் (திருச்சி, தொட்டியம் அருகே), கவின் (நாமக்கல், தூசூர்) மற்றும் பிரவீன்குமார் (வ.உ.சி. நகர்) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஐந்து பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் அப்பகுதி வருவாய்த் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.