சென்னை ஆதம்பாக்கத்தில் 1995-ம் ஆண்டு மாமியாரை கொலை செய்துவிட்டு, மனைவி மற்றும் மைத்துனரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில், 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, சென்னை தனிப்படை போலீஸார் ஒடிசாவில் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஹர பட்டா ஜோஷி. இவர் கடந்த 1993-ம் ஆண்டு சென்னைக்கு வந்து, கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரைச் சேர்ந்த இந்திரா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் ஹரிஹர பட்டா ஜோஷி மற்றும் இந்திராவுக்கு 13.07.1994 அன்று திருமணமாகி, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், இந்திரா தனது தாய் ரமாவின் வீட்டுக்குச் சென்று விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். இந்நிலையில், ஹரிஹர பட்டா ஜோஷி கடந்த 09.08.1995 அன்று மாமியார் ரமாவின் வீட்டுக்குச் சென்று மனைவி இந்திரா மற்றும் இந்திராவின் சகோதரர் கார்த்திக் ஆகியோரை கத்தியால் தாக்கி உள்ளார்.இதில், இருவரும் ரத்தக்காயத்துடன் தப்பியோடிவிட்டனர்.
பின்னர் ஹரிஹர பட்டா ஜோஷி வீட்டிலிருந்த மாமியார் ரமாவை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஹரிஹர பட்டா ஜோஷியை போலீஸார் தேடி வந்தனர்.
ஹரிஹர பட்டா ஜோஷியின் சொந்த ஊரான, ஒடிசா மாநிலம், கஞ்சா மாவட்டத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, எதிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தலைமறைவு குற்றப்த்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டடது.
தலைமறைவாக இருந்தவரைப் பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், மடிப்பாக்கம் உதவி ஆணையர் புருஷோத்தமன் நேரடி மேற்பார்வையில், ஆதம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையில், தலைமைக் காவலர் பாலமுருகன், முதல்நிலைக் காவலர் எட்வின் தீபக் மற்றும் காவலர் மணிவண்ணன் ஆகியோர அடங்கிய தனிப்படை ஹரிஹர பட்டா ஜோஷி 22 வயதில் எடுத்த கருப்பு வெள்ளை நிற புகைப்படத்துடன், ஒடிசா மாநிலம் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் விவேக், ஒத்துழைப்புடன், ஒடிசா மாநில காவல் துறையினரின் ஒருங்கிணைப்புடன் தனிப்படையினர் ஒடிசா மாநிலத்தில் சுமார் 2 வாரங்கள் முகாமிட்டு, பல இடங்களில் விசாரணை செய்தும், தீவிர தேடுதலில் ஈடுபட்டும், மேற்படி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஹரிஹர பட்டா ஜோஷிய கைது செய்தனர்.
விசாரணையில் ஹரிஹர பட்டா ஜோஷி ஒடிசா மாநிலம், பெஹ்ராம்பூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஹரிஹர பட்டா ஜோஷி, இன்று (டிச.26) ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடிவக்கைகளின்படி சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
மேற்படி வழக்கில் சுமார் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை கைது செய்ய உதவிய கஞ்சம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் விவேக், ஒடிசா மாநில காவல் துறையினர் மற்றும், உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தனிப்படையினரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் வெகுவாகப் பாராட்டினார்.
Mathi Media Network www.mathinews.com
www.livecid.in Crime News Gallery
Tamil Crime News Portal
www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.