திருச்சியில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரால் சுட்டுக்கொலை - யார் இந்த ஜெகன் ? "கல்லணை வரைக்கும் என் கண்ட்ரோல்" ஜெகனின் பின்னணி - livecidtaml

Admin
0

திருச்சியில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரால் சுட்டுக்கொலை - யார் இந்த ஜெகன் ? "கல்லணை வரைக்கும் என் கண்ட்ரோல்" ஜெகனின் பின்னணிதிருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கிற ஜெகதீசன் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் தழுவிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கொம்பன் ஜெகன் மீது அடிதடி, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலைமுயற்சி, கொலை வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரையடுத்து அமைந்துள்ள சனமங்கலம் வனப்பகுதியில் வழிபறி கொள்ளை தொடர்ந்து நடப்பதாக புகார் வந்த நிலையில் அந்த இடத்தில் தொடர் ரோந்து பணிக்கு தனிப்படை இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் எஸ்.ஐ.வினோத்குமார் உள்ளிட்ட போலீசார் சென்ற நிலையில் , அங்கிருந்த கொம்பன் ஜெகனை பிடிக்க முயன்ற போது எஸ்.ஐ. வினோத் குமாரை கத்தியால் தாக்கி தப்ப முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் கருணாகரன் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே கொம்பன் ஜெகன் பலியாகி விட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

அந்த வனப்பகுதியில். ஏராளமான சணல் குண்டுகளை தயார் செய்து பதுங்கியிருந்ததையும் கண்டறிந்து கைப்பற்றியுள்ளது காவல்துறை.

என்கவுண்டரில் பலியான கொம்பன் ஜெகனின் உடல் இலால்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலில் காயமடைந்த எஸ்.ஐ. வினோத்குமார் சிகிச்சைக்காக இலால்குடி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, எஸ்.பி.வருண்குமார், வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த கொம்பன் ஜெகன்


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், சர்க்கார்பாளையத்தையடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் - சரஸ்வதி தம்பதியினரின் இரண்டாவது மகன் 30 ஜெகன் (எ) ஜெகதீசன். மிகக்குறுகிய காலத்திலேயே தொடர் ரவுடியிச நடவடிக்கைகளால், "கொம்பன்" ஜெகனாக உருவெடுத்திருக்கிறான்.

திருச்சி யு.டி.வி. பள்ளி மாணவனும், சிறந்த கபாடி வீரருமான ஜெகன், முதன்முறையாக அடிதடி வழக்கு ஒன்றில் கைதானபோது, அவனது வயது வெறும் 17. நண்பர்களுக்காக யாராக இருந்தாலும் கை வைப்பதற்கு அஞ்சாதவன் என்று பெயரெடுத்தவனாம்.

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடிகளான மண்ணச்சநல்லூர் குணாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்திருக்கிறான். 2010 - இல் ஒரு கொலை முயற்சி வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இதனைத் தொடர்ந்து, 2011 இல் ஒரு கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடிகளான சுந்தரபாண்டியன், பிரவீன், மணி உள்ளிட்டவர்களுடன் கைதாகியிருக்கிறான். 2012- இல் ஒரு அடிதடி வழக்கு; 2013-இல் ஒரு கொலை முயற்சி வழக்கு என ஆண்டு தோறும் க்ரைம் ரேட் கூடியிருக்கிறது.

காதல் விவகாரம் ஒன்றில் திருச்சி புத்தூர் சீனிவாசநகரை சேர்ந்த கல்லூரி மாணவரை கொன்றதாக, முதன்முதலாக 2014 - இல் கொலை வழக்கில் கைதியாகி உள்ளான்.

இதனைத்தொடர்ந்து, 2015 இல் ரவுடி சக்திவேல் கொலை வழக்கு; 2016 - இல் திருச்சி ரவுடி சந்துருவை கொலை செய்ய முயன்றதாக வழக்குகளில் சிக்கியிருக்கிறான்.

டையூ மணியை கொன்றதற்காகவே அடுத்தடுத்து 3 கொலைகளை அரங்கேற்றிய நிலையில், 2017 -இல் கீழச்சிந்தாமணி ஓடத்தெருவைச் சேர்ந்த ரவுடி சசியை கொடூரமாக கொன்ற வழக்கில் குண்டாஸில் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறான்.

மீண்டும், 2018-இல் ஆட்கடத்தல் மற்றும் கொலைமுயற்சி வழக்கு; 2019 இல் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரவுடி ஒருவனை கொலை செய்த வழக்கு; 2021 இல் உறையூர் அரிசி வியாபாரியை கடத்திய வழக்கு என தொடர்ச்சியாக சிறை - குண்டாஸ் என அசராமல் இயங்கியிருக்கிறான் கொம்பன் ஜெகன்.


சிறையில் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், வேலூரை சேர்ந்த வசூல் ராஜாவுக்காக, 2020-இல் திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் பங்க் பாபுவை வெட்டி சாய்த்ததைத்தான் இவனது ரவுடிகள் வட்டாரத்திலேயே கூட, பிரமிப்பாக பார்க்கிறார்கள்.

பட்டப்பகலில் பலர் பார்க்க டீ கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த பங்க் பாபுவை நடு மண்டையில் ஒரே போடாக போட்டு வீழ்த்தியிருக்கிறான், ஜெகன். இதனையடுத்து அடுத்த சில நாட்களிலேயே, சேலத்தை சேர்ந்த செல்வத்துரை என்பவரை கொலை செய்த வழக்கில் சிக்கியிருக்கிறான் இந்த கொம்பன் கொடூர ஜெகன்.

திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், மதுரை, வேடசந்தூர் அரவக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல், சேலம், சிவகங்கை, நாகப்பட்டினம் என தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கொம்பன் ஜெகன் மீது 60-க்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5 முறை, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒரு முறை என இதுவரை 8 முறை குண்டாஸில் அடைக்கப்பட்டிருக்கிறான். முப்பது வயதை முடிப்பதற்குள்ளாக, ஏறத்தாழ எட்டு ஆண்டுகளை சிறைகளுக்குள்ளேயே கழித்திருக்கிறான், ஜெகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயிலுக்குள்ளேயேயும் கெத்து காட்டுவதில் குறைவைக்காத ஜெகன், சக கைதிகளுடன் அடிதடி தகராறில் ஈடுபட்டதற்காக சிறைக்குள்ளேயேயும் வழக்கு வாங்கிய சமூக இழிவாக மாறிய  ஜெகன். இதற்காகவே, சென்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறான். அங்கிருந்து வழக்கு விசாரணைக்காக ஒருமுறை திருச்சிக்கு அழைத்து வந்தபோது, அதற்கடுத்த நாளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில் ஒருநாள் மட்டும் திருச்சி சிறையில் அடைக்க முயற்சித்திருக்கின்றனர். அப்போது, போலீசாருடன் தகராறு செய்ததற்காகவே ஒரு வழக்கு இவன் மீது பதியப்பட்டிருக்கிறது.கடைசியாக, மதுரை ஜெயிலில் இருந்து வெளியே வந்த போதுகூட, "திருச்சி ஜெகனோட கோட்டை" என கொக்கரித்து விட்டு தான் வந்திருக்கிறான். ரவுடிகளுக்குள்ளாக நடக்கும் தொழில் தகராறில், ஒரு குரூப்புக்காக மற்றொரு குரூப் ஆட்களை அடிப்பதற்காகவே பெரும்பாலும் களமிறக்கப்பட்டிருக்கிறான் ஜெகன்.

பிரபல ரவுடிகளான சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், சுந்தரபாண்டியன், மண்ணச்சநல்லூர் குணா உள்ளிட்டோரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பதை காட்டியே, "கல்லணை வரைக்கும் என் கண்ட்ரோல்; கல்லணைக்கு அந்த பக்கம் கிளியூர் கண்ட்ரோல்" என ஏரியாவை பிரித்துக்கொண்டு தனது ஏரியாவுக்கு நான் தான் தாதா என கெத்து காட்டுவதில் மிக ஆர்வம் காட்டியிருக்கிறான்.

சமீபத்தில் தனது பிறந்த நாளில், பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி, கறி விருந்து கொடுத்து அலப்பறை செய்ததற்காக வழக்கு பதியப்பட்டு சிறை சென்று திரும்பியிருக்கிறான். என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரையில், விதம் விதமாக கெத்து காட்டிய வீடியோக்களை, புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில் முடிஞ்சா என்னை புடிச்சு பாரு ! சிபிஐ கூட என்னை தொட முடியாது என்ற குரலோடு சினிமாவில் வரும் தீம் மியூசிக் போட்டு மிரட்டி இருக்கிறான் கொம்பன் ஜெகன்.


திருச்சியை உலுக்கிய அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக வட்டார தகவல்களும் ரவுடிகளின் முன்னுக்குப் பின் வாக்குமூலங்களும் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

17 வயதில் கத்தியை பிடித்த கை, கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளையையும் கைவிட்டதோடு, வெறும் முப்பது வயதிலேயே வாழ்க்கையும் முடித்து வைத்திருக்கிறது.

இளைஞர்களுக்கு எதிர்மறை முன்னுதாரணமாக அமைந்துவிட்டான், கொம்பன் ஜெகன்.

கொம்பன் ஜெகனுக்கு வைத்த குறியா? இல்லை, இவன் வழியே "வேறு யாருக்கோ" கொடுத்த ரெட் அலர்ட்டா? என்ற பீதியில் உறைந்து கிடக்கிறார்கள், ஏரியா ரவுடிகள் ! 

 

www.livecid.in Crime News Gallery Tamil Crime News Portal www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !