சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
திருவள்ளூர் அருகே குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியன் என்ற பாலன்(23).
அதே ஊரைச் சேர்ந்த சிறுமி(17). இந்த நிலையில் பிளஸ்2 முடித்து விட்டு சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் போது,
இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து பாலசுப்பிரமணியன் சிறுமியை நகரிக்கு அழைத்தாரம். ஆனால், அங்கு வர மறுத்ததால் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என பெற்றோர் கடந்த 26.02.2020 இல் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதைத் தொடர்ந்து பேருந்தில் ஏறி கனகம்மாசத்திரம் வந்து பெற்றோரிடம் நடந்த விவரங்களை சிறுமி தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கு திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு 10.3.2021 இல் வழக்கு விசாரணைக்கு வந்து நடைபெற்று வந்தது.
இதற்கிடையே இறுதிக்கட்டமாக வியாழக்கிழமை வழக்கு விசாரணை செய்ததில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் கடத்தலுக்கு 10 ஆண்டுகளும், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ததற்கு 20 ஆண்டுகள், மிரட்டியதாக 2 ஆண்டுகள் என 32 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பு வழங்கினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக அமுதா ஆஜாரானார். அதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியத்தை போலீஸôர் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று புழல் சிறைச்சாலையில் அடைத்தனர்.