மேட்டூரில் 200 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளநோட்டு
சேலம் மாவட்டம் மேட்டூர் தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று ஒருவர் இறைச்சி வாங்க வந்தார். பின்னர் அவர் இறைச்சியை வாங்கி விட்டு 200 ரூபாய் நோட்டை கொடுத்தார். அந்த நோட்டை வாங்கி பார்த்த அண்ணாதுரை அது கள்ள நோட்டு என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர் மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் கோழி கடைக்கு சென்றனர். பின்னர் கள்ள நோட்டை கொடுத்தவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் கறிக்கடையில் கள்ள நோட்டை கொடுத்தது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த உபேஸ் அலி (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைது
அதில் மேட்டூர் காவிரி நகர் பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் (38) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சமீபகாலமாக தொழில் ரீதியாக பண தட்டுப்பாடு ஏற்பட்டு கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் தனது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த அப்துல் அக்கீம் (24) என்பவரை அழைத்து கடன் பிரச்சினையை சமாளிக்க கள்ள நோட்டு அச்சடிக்க ஆலோசனை கேட்டார்.
இதையடுத்து அப்துல் அக்கீம் தனது நண்பரான உபேஸ் அலி (24) என்பவருடன் சேர்ந்து காஜா மொய்தினின் கடையில் இருந்த பிரிண்டர் மூலம் 200 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மரியமுத்து கள்ளநோட்டு தயாரித்த காஜா மொய்தின், அப்துல் அக்கீம், உபேஸ் அலி ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
அவர்களிடம் இருந்து 200 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் பிரிண்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டு அச்சடித்து 3 பேர் கைதான சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது