கணவனின் சந்தேக புத்தியால் பிறந்து 29 நாட்களேயான பெண் சிசுவை அதன் தாயே மண்ணில் புதைத்து கொலை செய்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி பாகூர் கிருமாம்பாக்கத்தை அடுத்த புதுக்குப்பம் கடற்கரையில் இன்று காலை ஒரு குழந்தையின் தலை மண்ணில் புதைந்தவாறும் கால் மட்டும் வெளியில் தெரிந்த நிலையிலும் இருந்துள்ளது. இதனை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கிருமாம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே புதுக்குப்பம் குளத்துக்கு அருகே குடும்பத்துடன் வசிக்கும் நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன்(வயது 32), அவரின் 2வது மனைவி சங்கீதா(24) ஆகியோர் தங்கள் குழந்தையை காணவில்லை என தேடி வந்துள்ளனர். சங்கீதாவுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது
அப்போது புதுக்குப்பம் கடற்கரையில் குழந்தை ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது மணலில் புதைந்து இறந்து கிடந்த குழந்தை தங்களுடையது என தெரிந்து கதறி அழுதனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை 2வதாக திருமணம் செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணியான சங்கீதா, தனது தம்பி குடும்பத்துடன் கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய தினம் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் குமரேசன் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கொலை செய்திருக்கலாம் என குமரேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் குமரேசன், சங்கீதா தம்பதியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குமரேசன் தனது நடத்தையில் சந்தேகமடைந்து இந்த குழந்தை தனக்கு பிறந்தது தானா என்று கேட்டு சண்டையிட்டதால் ஆத்திரத்தில் குழந்தையை தாமே கொலை செய்ததாக சங்கீதா காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
www.livecid.in
Livecid.in Livecid
Crime News Gallery