தமிழகத்தில் நாளுக்கு நாள், கொலை கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் காவல்துறை வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபடுவதை விட சைக்கிளில் ரோந்து பணி செல்ல திட்டமிட்டார். நேற்று இரவு சாதாரண உடையில் சைக்களில் பயணம் மேற்கொண்டார். இந்த ரோந்து பணியின் போது இரவு காவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் திட்டமிட்டார். இதற்காக திடீரென சைக்களில் புறப்பட்ட அவர் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்ட 8 காவல்நிலையத்தை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்களில் சென்று ஆய்வு செய்தார்.
அதிகாலை 2.45 மணிக்கு வாலாஜா சாலையில் தொடங்கி முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், குறளகம் வால் டாக்ஸ் சாலை, வழியாக சென்றவர், அதிகாலை 4.15 மணிக்கு ஸ்டான்லி சுரங்கப்பாதையில் தனது ரோந்து பணியை முடித்தார். அப்போது காவல் ரோந்து வாகனம் மற்றும் காவல்நிலையங்களில் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். இரவு நேரத்தில் நடைபெறுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் இரவு நேர அவசர அழைப்புகளுக்கு காலவர்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த இணை ஆணையர் ரம்யா பாரதி, இரவு நேரத்தில் சைக்களில் ரோந்து மேற்கொண்டது புதுவகையான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். பெண் இணை ஆணையரின் இரவு ரோந்து தொடர்பாக படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகள் ரம்யா பாரதியை பாராட்டி வருகின்றனர். இந்தநிலையில் துபாய் பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த தகவல் கேள்விபட்டு,ரம்யா பாரதியை பாராட்டி டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
www.livecid.in
Livecid.in Livecid
Crime News Gallery